பக்கங்கள்

23 ஜூன், 2014

ஆரோக்கியமும் பாரதியும்

                                                          பாப்பா பாட்டு
   
  எட்டயபுரத்துக்கவி  முண்டாசுக்கவி பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களால் புரட்சி உண்டாக்கினார். எல்லோருக்கும் பாடினாலும் எல்லோராலும் பெரிதும் விரும்பப்படுவது பாப்பாப்பாட்டு.

       பாப்பாப்பாட்டு என்றதும் இது குழந்தைகளுக்கான பாடல் என்றே நாம் நினைக்கிறோம்.ஆனால் உண்மையில் பாரதி நம்மைத்தான் குழந்தையாக நினைத்துப் பாடியுள்ளார் என்பதை அதன் கருத்தை ஆராய்ந்து பார்த்தால் தெரியும்.இதில் நம் ஆரோக்கிய இரகசியத்தையே புதைத்து வைத்துள்ளது உணர்ந்தவர்களுக்கே புரியும்.

        கவிஞர்கள் கவிதை எழுதும்போது தங்களையோ பிறரையோ ஏதேனும் ஒரு உறவு முறையில் விழிப்பது வழக்கம்.அந்த வகையில் பாரதியாரும் நம்மை பாப்பாவாக பாவித்து கூறியுள்ளார்.

         முதலில் ஓடி விளையாடு ஓய்ந்து இருக்கலாகாது என்கிறார்.இதற்கு எப்பொழுதும் சுறுசுறுப்பாக இரு சோர்வு கொள்ளாதே செயலாற்று என்று பொருள்.இது கீதையில் கிருஷ்ணர் கூறிய கர்மயோகத்தின் அடிப்படையாகும். கீதை அத்யாயம் 3-22,23ம் ஸ்லோகத்தில் அர்ஜுனா மூவுலகிலும் நான் செய்ய வேண்டிய காரியங்கள் இல்லை என்றாலும் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபாடாவிட்டால் மணிதர்கள் என் வழியையே யாண்டும் பின் பற்றுவர் என்பதை சுருக்கியுள்ளார்.

           ஓய்ந்திருத்தல் என்பதற்கும் இளைப்பாறுதல் என்பதற்கும் வித்தியாசம் உண்டு.ஒருவர் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்றால் அவர் மீண்டும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யப்போவதில்லை என்று பொருள். அதுவரை அவர் பணி முடிந்து சற்று இளைப்பாற வீட்டுக்கு வந்து போகிறார் என்பதே பொருள்.எனவே எக்காலமும் ஒய்வின்றி கடமையாற்றுவதே கடமை.

           கூடிவிளையாடு குழந்தையை வையாதே என்பதில் இருந்தே இது நமக்கு சொன்னது என்பது தெரியும்.ஊருடன் ஒத்து வாழ் என்பது பழமொழி. குழந்தைகளை திட்டுவதனால் அவற்றின் பிஞ்சு மனதில் தாழ்வு மனப்பான்மை வெறுப்பை உண்டாக்காதே என்று மன ஆரோக்கிய இரகசியத்தை புதைத்து உள்ளார்.

            காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.இரவு தூங்கி எழும்போது உறுப்புகள் எல்லாம் ஓய்வாக இருக்கும். இந்நேரத்தில் உடலுக்கு வேலை கொடுக்காமல் தியானம் பூஜை யோகா என்று உடலை வருத்தாத செயலில் ஈடுபட்டால் உடல் களைப்பில்லாமல் இருக்கும். அதனால் இரத்த அழுத்தம்(BP)மன அழுத்தம்(Tension)உண்டாகாது. வாய் திறந்து மூச்சு இழுத்து பாடுவது பிராணாயாம பயிற்சியாகும். மாறாக காலை நடை பயிற்சி உடற்பயிற்சி என்று கஷ்டப்படுத்தினால் ஜீரனக்கோளாறுகளும், சர்க்கரை இழப்பால் சோர்வும் உண்டாகி பணி நேரத்தில் தூக்கமும் அதனை கட்டுப்படுத்தும் போது இரத்த அழுத்தமும் மன இறுக்கமும் உண்டாகின்றன.

        மாலைமுழுதும் விளையாட்டு. மாலையில் உடற்பயிற்சி நடைப்பயிற்சி விளையாட்டு என்று செலவிடும்போது காலை மதியம் உண்ட உணவில் உள்ள சர்க்கரை கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடலில் தேவையான இடங்களில் சேர்ந்து விடுகிறது.பயிற்சிகளால் உடல் களைப்படைவதால் இரவு நல்ல தூக்கம் கிடைக்கிறது.ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

           தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள்.நாம் இளமையில் எதை பின்பற்றுகிறோமோ அதுவே முதுமையிலும் தொடரும்.எனவே நீ இளமையிலேயே இத்தகைய பழக்கத்தை பின்பற்றி ஆரோக்கியமாக வாழ் என்பதையே பாப்பாபாட்டு மூலம் நமக்கு கூறுகிறார் பாரதியார்.

             இந்தப்பாட்டுக்கே நாம் விளக்கம் தர வேண்டியுள்ளது என்றால் நாம் தமிழில் எவ்வளவு பின் தங்கி உள்ளோம் என்பதை சிந்தியுங்கள்.எனவேதான் செல்லத்தமிழ் மெல்லச் சாகும் என்று அன்றே கூறி சென்றுவிட்டார்.

                                    வாழ்க பாரதி!