பக்கங்கள்

24 மார்ச், 2018

பால் Milk


                            பால் (MILK)

      முலைப்பாற் பொதுக்குணம்

      தன்னியமன்றோதிற் சருவதோஷங்களும்போம்
      உன்னியதாபமொழியுங்காண்-சந்நியொடு
      வாதசுரம்பித்தசுரம் வன்கபச்சுரந்தணியுங்
      கோதில்வலுமையுண்டாங்கூறு
                     இதுவுமது
      இருந்தோஷம்போக்கு மிகற்கிரிச்சந்தீர்க்கும்
      அருந்துமருந்தி னனுபானம்-பொருந்தும்
      அஞ்சனத்திற்காகு மறல்வறட்சிநீக்கிவிடும்
      பஞ்சினடிமாதர்முலைப் பால்    
(0)முலைப்பால் எழுவகைத் தோஷங்கள் வெப்பம் சந்நிபாதம் வாதபித்த சுரங்கள் திரிதோஷம் வாதகிரிச்சரம் நாவறட்சி ஆகிய யிவைகளை விலகி வன்மையைத் தரும் ஔஷத அனுபானத்திற்கும் கலிக்கத்திற்கும் ஆகுமென்க (தன்னியம் என்பது முலைப்பால்)
                 கருமை-செம்மை-நிற மாதர்களின் முலைப்பாற் குணம்
        கரியநிறமாதர் கலசமுலைக்கீரம்
        அரியவிழிக்காமருந்திற்காகா-திருநிலத்துள்
        நோயணுகாச்செய்ய நுடங்கிடையார்தம்முலைப்பால்
        தீயமுத்தோஷம் போக்குஞ்சேர்
()கரியநிற மாதர் முலைப்பால் கண் வயித்தியங்களுக்கேயன்றி ஔஷதங்களுக் குபயோகமாகாது வியாதியில்லாத செம்மைநிற மாதர் முலைப்பால் வாதாதி மூன்று தோஷங்களையும் போக்கும் –கீரம்=பால்
                  பரத்தையர் முலைப்பாற் குணம்
         பரத்தையர்முலைப்பாற்குப் பார்முத்தோஷங்கள்
         உரத்துவரும்வாதமு முண்டாகும்-இரத்தச்
         சொறிகிரந்திபுண்ணுந் தொடர்கழணோய்சேருங்
         குறியறிந்துநீக்கிக் கொடு
()வேசையர் முலைப்பாலால் திரிதோஷங்கள் வாதரோகம் இரத்தச் சொறி கிரந்தி விரணம் கழல்வாதம் யிவை யுண்டா மென்க
                  பசும்பாற் பொதுக் குணம்
       பாலர்கிழவர் பழஞ்சுரத்தோர்புண்ணாளி
       சூலையர்மேகத்தோர் துற்பலத்தோர்-ஏழுமிவர்
       எல்லார்க்குமாகு மிளைத்தவர்க்குஞ்சாதகமாம்
       நல்லாய்பசுவின்பால் நாட்டு
()பசுவின் பாலானது பாலருக்கும் விருத்தருக்கும் பழயசுரம் விரணம் சூலை பிரமேகம் துர்ப்பலம் அதிகஷ்கரோகம் ஆகிய யிவைகளை யுடையவர்களுக்கும் ஆகுமென்க
          வெண்மை- செம்மை-கருமை-கயிலை யென்னும் யின்னிற முள்ள
                பசுக்களின் பாற் குணம்
        வெண்பசுவின்பால்போக்கும் பித்தத்தைமெய்சிவந்த
        வண்பசுவின்பால்போக்கும் வாதத்தை-கண்சிறந்த
        காராவின்பால்போக்கு மையங்கலைப்பால்
        ஆசமிர்தாந்தோஷ மறுக்கும்
()வெண்மைநிறப் பசுவின் பால் பித்தகோபத்தையும் செம்மை நிறப்பசுவின் பால் வாததோஷத்தையும் கருமை நிறப்பசுவின் பால் கபரோகத்தையும் கபிலை நிறப் பசுவின்பால் திரிதோஷத்தையும் போக்கும் கபிலையென்பது கருமை கலந்த பொன்னிறமாம் என்க
                  காராம்பசுவின் பாற்குணம்
         கண்ணோயகற்றுங் கயரோகந்தான்போக்கு
         மண்ணிலுள்ளபால்தோஷ மகற்றுங்காண்-பெண்ணே
         இரத்தபித்தம்போக்கு மிராசவசியங்
         கறுத்தபசும்பாலதனைக் காண்
()காராம்பசுவின் பால் விழப்பிணிக்ஷயம் மற்றைப்பாலின் தோஷங்கள் ரத்தபித்தரோகம் இவைகளை நிக்கும் ராஜவசியமாம் பெண்ணே
நாரைமான் –கபிலையென்னும் இந்நிறமுள்ள பசுக்களின் பாற்குணம்
         நாரைப்பசுவின்பால் நாளுமுயனோயகற்று
        மரரைநிறப்பசும்பால் வாய்த்திடினோ-வேதையுறு
        முப்பிணியும்போகு மொழிகபிலையின்பாலுந்
        செப்பிணியும்போமே யிரங்கி
()நாரைப் பசும்பால் முயல்வலி தீர்க்கும் வாணிப் பசும்பாலால் திரிதோஷமும் கபிலை நிறப் பசும்பாற்குப்  பலபிணியும் நீங்குமென்க
                கொம்பசையும் பசுவின் பாற்குணம்
         கொம்பசையுமாப்பாலோ கூறுயுத்தம்போக்கிவிடுந்
         தம்பவாதத்தைத் தருவிக்கும்-வம்புமுலை
         மானேகேள்விந்துவை வளப்பிக்கும்வன்கபத்தைத்
         தானேயெலுப்புமெனச் சாற்று 
()கச்சணிந்த தனங்களையுடைய பெண்ணே அசைகின்ற கொம்பையுடைய பசுவின்பால் பித்தரோகத்தை நீக்கும் தனுஸ்தம்பவாதம் சுக்கிலதாது கபநோய் இவைகளை விளைக்கும்
                   மூன்றாமீற்று நான்காமீற்றுப் பசுக்களின் பாற்குணம்
         மூன்றாமீற்றீண்பான் முதிர்கபத்தைப்போக்கிவிடும்
         என்றநான்காமீற்றெனும்பாலுங்-கூன்றுதிரி
         தோடமகலுந் சுகமுண்டிங்வாப்பாற்சந்
         தோடமெவர்க்குமுண் டாகும்
(0)மூன்றாம் ஈற்றுப் பசுவின்பால் நீடித்த சிலேஷ்ம நோயை நீக்கும் நான்காம் ஈற்றுப் பசுவின்பாலுக்கு வாதாதி மூன்று தோஷங்களும்நீங்கும் சரீர சவுக்கியமும் மகிழ்ச்சியும் வுண்டாகுமென்க
                   ஆகாப்பசுவின் பாற் குணம்
         விஞ்சுவரணைதாராநோய் மிகுத்துங்கழலல்வெண்புள்ளி
         துஞ்சியலைந்துமலமருந்தல் சுடுகாடேகியெலும்புணலிவ்
         வஞ்சுவகையினாவின்பா லாகாதணுகிரறிரிதோஷம்
         நெஞ்சிலடையுங்கயநோயா நிறைந்தவயதுங்குறைந்திடுமே
()ஆகாப் பசுவின்பால் ஐந்து வகைப்படும் அவையாவன அரணைநோய் தாராநோய் மிகவுஞ் சுற்றுதலோடு வெண்மைப்புள்ளி தூங்கித் திரிந்து மலம் அருந்தல் இடுகாட் டெலும்பு வுண்ணல் ஆகிய யிவைகளையுடைய பசுக்களின் பாலாம் யிவை சேரும் கீல் வாதாதி மூண்றுதோஷங்களும் மார்பிற் சேர்ந்து க்ஷயத்தை விளைவிப்பதும் ஆயுளைக் குறைப்பதுமா மென்க
                    பகற்பசுவின் பாற்குணம்
         பகற்பால்சிசுக்கட்குப் பக்குவமென்றாலுந்
         விகற்பமோடைப்பெருக்குமெய்யே-யெதற்குமிதத்
         தீதடரச்செய்யுமித்தாற் சேராதுட்காய்ச்சுலனல்
         தாதவிழும்பூங்குழலே சாற்று
()மகரந்தங்களுதிர் மலரணிந்த அழகிய கூந்தலையுடையாளே பகற்பசுவின் பால் குழந்தைகளுக்கும் பக்குவமா மென்றாலும் பற்பல கப நோயையும் தாம்பூலம் பளிப்பு முதலிய சேருமிடத்துக் கெடுதியையும் செய்யும் உட்சூட்டையும் வெப்பத்தையும் நீக்குமென்க
                           இதுவுமது
         பகற்பசும்பால்காச்சிப் பருகினழலும்
         இகற்பமுமீளையு மிராவாம்-புகல்பித்த
         வேகமும்போமேனியெல்லா மேயிருந்தாதுவுமாம்
         போகமுமுண்டாகும் புகல்
()அயிலை நிகர்த்த கண்களையும் ஆராய்ந்திழைக்கப் பெற்ற ஆபரணத்தை யுடைய பெண்ணே  பகலிற் சுரந்து இரவிற் கறக்கின்ற பாலை விதிப்படி காச்சி யருந்தில் தேகஅழற்சி கபரோகம் சுவாசம் பித்தகோபம் நேத்திரவியாதி விந்துவின் கெடுதியாலனுசரித்த சிற்சில ரோகங்கள் ஆகிய இவை நீங்கும்                
                தே,இராப்பசுவின் பாற்குணம்
         இரவின்பால்கண்ணி லெலுபிணிபோக்கும்பின்
         பரவியநோயும்போக்கும்-விரகமுற்றார்க்
         கத்தியம்பன்னவிழி யாயிழையேயாவருக்கும்
         பத்தியம் மென்றைக்கும்பார்
(0)தேகத்தில் மினுமினுப்பும் சுக்கிலப் பெருக்கமும் மாதர்மேல் விருப்பமும் உண்டாகும் இது பத்தியத்திற் குதவும் என்க பகல் முழுதும் சுரந்து இரவில் கரப்பது பகற்பாலாம் இரவு முழுதும் சுரந்து காலை கறப்பது இராப்பசும்பால்
                 தே,எருமைப்பாற் குணம்
         வாதத்திமிரைவர வழைக்கும்புத்தியினற்
         போதத்தெளிவைநனி போக்குங்காண்-கோதற்ற
         யங்கத்துறுகருந்தை யன்றேமுறித்துவிடும்
         பங்கத்துறு மேதிப்பால்
()எருமைபால் திமிர்வாயுவைத் தருவிக்கும் தெளிந்த புத்தியின் கூர்மையும் நல்ல மருந்தின் குணத்தையும் கெடுக்கு மென்க
                  வெள்ளாட்டுப் பாற்குணம்
         வெள்ளாட்டுப்பாலுக்கு மேவியநற்றீபனமாந்
         தள்ளாடுவாதபித்த சாந்தமாம்-உள்ளிரைப்புச்
        சீதமதிசாரஞ் சிலேஷ்மமறும்புண்ணாறும்
        வாதகிலேசமும்போ மாய்ந்து
()வெள்ளாட்டுப் பாலினால் வாதபித்த தொந்தம் சுவாசகாசம் சீதாதிசாரம் கபதோஷம் விரணம் வாதத்தா லுண்டாகிய வீக்கம் முதலிய துன்பம் இவை நிங்கும் நல்ல பசியும் உண்டாகும்
                    செம்மறியாட்டுப் பாற்குணம்
        செம்மறிப்பால்பித்தஞ் சிலேஷ்மத்தையுண்டாக்கும்
        விம்மும்வயிறுமிகமேன்மூச்சாங்-கொம்மை
        வருமுலையாய்பத்தியத்தில் வாராதுவாய்வாம்
        பருகுவர்க்குநாளும் பகர்
(0)திரட்சியாய் வளர்ந்து வருவனவாகிய தனங்களையுடைய பெண்ணே வாத ரூபமான செம்மறியாட்டுப்பால் பித்தசிலேஷ்ம தொந்தம் வயிற்றுப்பிசம் மேற்சுவாசம் பத்தியத்திற் குதவாது வாய்வு யதிகரித்து இவைகளை யுண்டாக்கு மென்க
                   யானைப்பாற் குணம்
        வாதம்போந்தாதுபுஷ்டி வந்தடருமவன்பலமோ
        யாதுபித்தங்கூடியழகுதிக்குந்-தாதுமலர்த்
        தேனைப்பாலிற்கலந்த தித்திப்பைபோலிருக்கும்
        யானைப்பாலுண்ணு மவர்க்கு
()தேனும் பாலும் கலந்த ருசி போன்ற யானைப்பாலைக் குடிப்பவருக்கு வாத கோபம் நீங்கும் சுக்கில விருத்தியும் மிகுவன்மையும் பித்த சம்பந்தமான தேக அழகும் உண்டாகு மென்க
                  குதிரைப்பாற் குணம்
         வீரியவிருத்தி விளைக்குமழகுண்டாகுங்
         காரியத்திற்காமங் கதிப்பிக்கும்-வாரார்
         கரகமெனச்செப்புமுலைக் காரிகையேகேளாய்
         துரகதப்பால் செய்யுந் தொழில்
 ()வாரினா லிறுக்கிய பொற்கலசமெனப் புகலுங் கொங்கைகளை யுடைய மங்கையரே குதிரைப்பால் சுக்கிலப் பெருக்கத்தையும் சரீர வனப்பையும் புணர்ச்சியில் நிருவாகத்தையும் உண்டாக்கு மென்க
                   ஒட்டைப்பாற் குணம்
               ஒட்டைப்பாலுமக்குமந்த மூர்வாதசூலையோ
               டட்டகுணக்கரப்பா நார்வதன்றி-மட்டிடாக்
               காதிரைச்சன்மந்தமதி காசஞ்சுவாசமுமா
               மாதரைகுணாளும் வழுத்து
()ஒட்டைப் பாலினால் அக்கினிமந்தம் வாதசூலை எண்விதகரப்பான் காணநாத செவிடு அதியிருமல் இரைப்பு இவை யுண்டாகும்
                  கழுதைப் பாற்குணம்
         கழுதைப்பால்வாதங் கரப்பான்விரணந்
         தழுதளையுள்வித்திரதி தானே-யெழுகின்ற
         ஒட்டியபுண்சீழ்மேக மொடுசொறிசிரங்கு
         கட்டியிவைபோக்குங் காண்
                   இதுவுமது
         கத்தவத்தின்பாற்குக் கரியகிரந்தியறுஞ்
         சித்தப்பிரமைபித்தந் தீருங்காண்-தத்திவரும்
          ஐயமொழியுமா மதிகமதுரமுமாஞ் 
          செய்யமடமயிலே செப்பு
()அழகு மிளமையும் பொருந்திய மயிலணைய பெண்ணே கழுதைப்பால் மிகு மதுரத்தையுடையது யிது வாதநோய் கரப்பான் புண் தழுதலைரோகம் உள்வித்திரிதிக்கட்டி ஒட்டுக்கிரந்தி சீழ்ப்பிரமேகம் சொறிசிரங்கு அற்புத விரணம் சித்தப்பிரமை தோஷம் கபநோய் யிவைகளைப் போக்கு மென்க
            பாத்திர பேததிலுண்டாகிய பாற்குணம்
        செப்பிலடும்பால்வாத சீதமொழிக்கும்பொன்மண்
        கும்பத்தடுபால்போக் குப்பித்தை-யம்புவியுள்
        வெள்ளியுறையிரும்பில் விட்டுக்காய்ச்சும்பாலாற்
        துள்ளியுறையைமருஞ் சொல்
()செப்புப் பாத்திரத்தில் காச்சிய பால் வாதசிலேஷ்மதொந்தத்தையும் பொன் மண் இப்பாத்திரங்களிற் காச்சிய பால் பித்ததோஷத்தையும் வெள்ளி வெண்கலம் இரும்பு யிப் பாத்திரங்களிற் பால் காசரோகத்தையும் போக்குமென்க
              ஆடையெடுத்த பாற்குணம்
        ஆடையெடுக்குபாலா லக்கினிமந்தப்படுமே
        வாடைநல்லாய்சீரணமாம் மாதமறுங்-கோடையிடி
        போலுமெழுந்தபித்தம் போகுமையமேகுமயில்
        வேலனையகண்ணாய் விதி
(0)கூரிய வேலனைய கண்களையுடைய பெண்ணே ஏடு நீக்கிய பாலால் அக்கினிமந்தமும் சப்ததாதுக்களின் சீரணமும் வுண்டாம் வாதபித்தகப தோஷங்கள் நீங்கு மென்க
            காய்ச்சும் பாலுக்கு நீரளவைக் கூறல்
         ஆடுபசும்பால்காச்சி லஷ்டபாகம்புனலாம்
         நீடெருமைசெம்மறிக்குநேர்நேராந்-தேடரிய
         சுக்குசிறுகாஞ்சொறிவேர் கூட்டிச்சுவரியபா
         லொக்கும்வெள்ளாட்டுப்பாற் குரை
(0)வெள்ளாடு பசு யிவையின் பாற்கு எட்டிலொரு பங்கும் எருமை செம்மறியாடு  யிவைகளின் பாற்குச் சரிபங்கும் ஜலம் விட்டுக் காய்ச்ச வேண்டும் யெவ்வித பால்களுக்கும் சுக்கு சிறுகாஞ்சொறிவேர் சேர்த்துக் காச்சில் அவைகள் வெள்ளாட்டுப் பாலுக்கு நேரா மென்க
                    பாலேட்டின் குணம்    
           பாலேட்டாற்பித்தமற்றும் பாழ்த்தகொடுஞ்சர்தியும்போம்
     மாலாட்டுமூர்ச்சையும்போம் வன்பலமா-மேலாலே
     தாதுமிகுந்தீபனமாந் தானேயிளைத்தவர்க்குக்
     கோதுமறுமாமயிலே கூறு
()பாலிலுண்டாகும் ஏட்டினால்பயித்தியநோயும் கொடியவாந்தியும் மூர்ச்சையும் நீங்கும் மிகுபலமும் சுக்கிலமும் ஜடராக்கினியும் விருத்தியாம் யிதைத் துற் பலதேகிகளுண்டாலும்குற்றமில்லை என்க
                 தேங்காய்பாற் குணம்
      வாதமாம்பித்தமுறும் மன்கரப்பனும்படரும்
      தாதுவும்விருத்தியாந் தார்குழலே-யோதநல்ல
      அன்னமிறங்கு மதியுரிசை யுண்டாகும்
      தென்னங்காய்ப்பாலாற் றெளி
()தாழ்ந்த கூந்தலை யுடைய பெண்ணே மிகு மதுரத்தால் யுணவையுட் செலுத்துகின்ற தெங்கின் பாலால் வாதவிகாரம் பித்தாதிக்கம் கரப்பான் சுக்கில விருத்தியும் ஆம்

கருத்துகள் இல்லை: