பக்கங்கள்

16 ஜனவரி, 2012

பிரஷர் கீரை

இந்த மூலிகையின் சரியான பெயர் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். அரை நெல்லி இலை போல் இருக்கும் இம்மூலிகையை சமைத்துண்ண இரத்த அழுத்தம் இயல்பான நிலைக்கு வரும்.

குப்பை மேனி

தெரு ஓரங்களில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கும் ஒரு மூலிகை. இம்மூலிகைக்கு சித்தர்கள் வைத்திருக்கும் பரிபாஷை பெயர் பூனை வணங்கி.
  1. இதன் இலையுடன் மஞ்சள், சிறிது உப்பு சோ்த்தரைத்து சொரி சிரங்குகளின் மேல் பூச விரைவில் குணமாகும். தோல் நோய்களும் குணமாகும்.
  2. இலைச்சாறு சமன் பசும்பாலுடன் கலந்து உரைகுத்தி தயிரை மாதவிலக்கான 3 நாட்களும் காலை வெறும் வயிற்றில் குடிக்க குழந்தைப் பேறு உண்டாகும்.
  3. இதன் இலைச்சாற்றை வலது காதில் விட இடக்கண் நோயும், இடது காதில் விட வலக்கண் நோயும் இரு காதிலும் விட இரண்டு கண்களிலும் ஏற்பட்டுள்ள கண்நோய் குணமாகும்.
  4. இலையை பொடி செய்து மூக்குபொடி போல் உபயோகிக்க தலைவலி நீங்கும்
  5. செடியை வேருடன் பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து வஸ்திரகாயம் செய்து (மெல்லிய துணியில் சலித்து) ஒரு சிட்டிகை பொடியை நெய்சோ்த்து காலை மாலை 40 நாட்கள் உண்டுவர பவுத்திரம் நோய் நீங்கும்.
  6. வேரைபொடி செய்து கஷாயம் செய்து (ஒரு லிட்டரை அரைக்கால் லிட்டராக காய்ச்சி)குடிக்க நாக்குபூச்சி, வயிற்று கிருமிகள், நாடா புழு நீங்கும்
வேறு பலன்களை அவ்வப்போது இணைக்கிறேன்
 

ஆடாதோடை

ஒவ்வொருவர் வீட்டிலும் வளர்க்கப்பட வேண்டிய ஒரு மூலிகை. இதன் இலையை பிட்டவியலாக அவித்து சாறு எடுத்தோ, கஷாயம் தயாரித்தோ தேன் கலந்து 50மிலி இருவேளை குடிக்க ஆஸ்துமா, சளி, ஜலதோஷம் குணமாகும். இதன் வடக்கு வேரை கஷாயம் செய்து இருவேளை கடைசி மாதத்தில் குடிக்க சுகபிரசவம் ஆகும்.

நித்யகல்யாணி

நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை ஸ்புன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க  பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.

சிறுதேள்கொடுக்கு

இதன் மலர்கள் தேள் கொடுக்கு போல் வளைந்து இருக்கும். இதன் இலையைக் கசக்கி தேள் கொட்டிய கடிவாயில் தேய்க்க வலி, விஷம் நீங்கும். இலையை அரைத்துப் புச புண், சிரங்கு, கரப்பான் குணமாகும்.

எழுத்தாணிப்புண்டு

           இதன் இலைகள் பித்த நரையை போக்கவல்லவை. தொடர்ந்து துவையல் அல்லது கஷாயமாக உட்கொள்ள நரைமயிர் கருக்கும். இளமையைக் கொடுக்கும். முத்தெருக்கஞ்செடி என்றும் சொல்வார்கள். இலைச்சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்குக்கு தடவலாம்.இதன் வேரை 5கிராம் எடுத்து பால்விட்டரைத்து இருவேளை குடிக்க கரப்பான், பரு, சிறுகட்டிகள் நீங்கும். பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சி பெறும்.

நொச்சி


              நொச்சியில் பல வகைகள் உள்ளன. கருநொச்சி விசேஷமானது.
  1. இலையை தலையணையாக பயன்படுத்த தலைவலி, கழுத்துவலி நீங்கும்.
  2. வேப்பிலை, மஞ்சள், ஆடாதோடை இலைகளுடன் நொச்சி இலையையும் போட்டு ஆவி பிடிக்க ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும்.
இதன் பிற பயன்களை அவ்வப்போது அறியவரும்பொது பகிர்ந்து கொள்கிறேன்.

கரு ஊமத்தை


ஊமத்தையில் பல வகைகள் உள்ளன. மேலே காண்பது கரு ஊமத்தை. நீலம், வெள்ளை, மஞ்சள் என பல நிறங்களில் உள்ளன. எல்லா வகை ஊமத்தைகளின் பயனும் ஒன்றாக இருந்தாலும் கரு ஊமத்தை சற்று விசேஷமானது. ஊமத்தை வெளிப்பிரயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
  1. இதன் பிஞ்சை உமிழ்நீர் விட்டு அரைத்து தலையில் புழு வெட்டு ஏற்பட்ட இடங்களில் தடவ புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்
  2. இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி தைலமாக்கி ஆறாத புண்கள், ரணங்கள் மேல் தடவி வர விரைவில் ஆறும்.
  3. இதன் இலையை உலர்த்தி  சுருட்டி புகைபிடிக்க ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சு திணறல் தற்காலிகமாக நீங்கும். தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
  4. இலையை நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்ட மூட்டு வலி, வாதவலிகள் நீங்கும்.
  5. கரு ஊமத்தை சாறு பாதரசத்தை கொண்டு ரசமணி செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
 இதன் வேறு பலன் அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

பெருந்தும்பை



பெருந்தும்பை என்னும் இந்த மூலிகை குழந்தைகளின் மாந்தம் எனப்படும் வயிற்றுக் கோளாறுகளை குணப்படுத்தும். அல்சர் நோய்க்கும் நல்ல மருந்து. இதனைச் சாறு எடுத்து குடிக்க வேண்டும். இதற்கு ஜோதிபத்ரம் என்ற பெயரும் உண்டு. இதன் இலைகளை பச்சையாக சுருட்டி விளக்கிற்கு திரியாக பயன்படுத்தலாம். ரத்தக் கழிச்சல் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவரால் பிழைக்காது என்று கைவிடப்பட்ட ஒரு நாய்க்குட்டிக்கு இந்த மூலிகைச் சாற்றை ஒரு வேளை கொடுத்ததிலேயே குணமாகி விட்டது. இதன் வேறு பெயர்கள் மற்றும் பயன்கள் அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.