பக்கங்கள்

13 டிசம்பர், 2017

அத்தி Ficus racemosa L;Moraceae


  அத்தி       Ficus racemosa L;Moraceae      
 மாற்றுப்பெயர் ; கோளி                                                      வளரியல்பு     ;பெருமர வகை .பால் வடிவச் சாறு உடையது.                                                                                                                                             இலைஅமைப்பு ; மாற்றடுக்கில் முழுமையான இலைகள்                                                                                                                                               பூ,காய்           அடிமரத்தில் கொத்துகொத்தாய் காய்க்கும்                                                                                                                                                                                    மருத்துவ பாகம் ; இலை,பிஞ்சு,காய்,பழம்,பால்,பட்டை                                                                                                                                            குணம்            ;                                                                                                                       தீர்க்கும் நோய்கள்
                                                        அத்திக்கள்ளு

அத்திமே கஞ்சூ டதிமயக்கந் தாகமும்போ
மத்திமா வேரிலுண் டாமதுவில் – நித்தியமுஞ்
சீனியே னும்பேயன் செங்கனியே னுங்கலந்தே
பானுவுத யங்குடித்துப் பார்

அத்திமர வேரிலிறக்கிய கள்ளில் சீனிச் சர்க்கரை அல்லது பேயன் வாழைக் கனியாவது கலந்து தினம் காலை சூரிய உதயகாலத்தில் பருகிவர அஸ்திமேகம்,உட்சூடு,மூர்ச்சை,விதாகம் நீங்கும்
செய்கை ; வியதாபேதகாரி,பலகாரி,சீதளகாரி.
                      
                       அத்திக்காய்

அத்திக்காய் தன்னை அருந்தினாலா ரணங்கே
எத்திக்கும் மேகம் இருக்குமோ – சத்திக்கும்
வாதம் அகலும் மலங்கழியும் சூலையோடு
மீதனலும் புண்ணும்போம் விள்.
செய்கை ; இலகுமலகாரி,சமனகாரி
அத்திக்காயால் பிரமேகம்,வாதநோய்,சூலை,சரீர வெப்பம்,வீரணம் போம். மலங்கழியும்.
                     
                       அத்திப்பட்டை

வீறுகடுப் பிரத்தம் வெண்சீத ரத்தமொடு
நாறுவி ரணங்களெல்லாம் நாடாவாங் கூறுங்கால்
அத்திதருமே கம்போல் ஆயிழையே ! எஞ்ஞான்றும்
அத்திப்பாற் பட்டைக் கறி
செய்கை ; சங்கோசனகாரி
அத்திப் பட்டைக்கு ஆசனக்கடுப்பு,உதிரப்போக்கு,சீத ரத்தபேதி,விரணம், பிரமேகம் ஆகியவை போம்.
                      
                        அத்திப்பழம்

தினமுமலக் கட்டொழிக்குந் தேகவெப்ப நீக்கும்
வனமுறுபித் தக்கோப மாற்று – மினுமயிலுந்
துன்னு விழியையடைச் சொன்னமே வையகத்தோர்
பன்னுவிதை யத்திப் பழம்.
      இரத்தமுண் டாக்குமி ளைத்தமெய்யைத் தேற்றுஞ்
      சுரத்திலாம் வெப்பைத் தொலைக்கும் – கரத்த
      மலத்தைக் கடிதுதள்ளும் வன்னிகபத் தொந்தம்
      பலத்ததசை யத்திப் பழம்
செய்கை ; இலகுமலகாரி,சமனகாரி,பலகாரி.
விதையத்திப் பழமானது நித்திய மல பந்தத்தையும்,சரீர உஷ்ணத்தையும், பித்தவேகத்தையும் போக்கும்.
உஷ்ணசீதமுள்ள தசையத்திப்பழம் ரத்த விருத்தியையும்,தேக போஷனையும் தரும்.சீரண மலத்தையும் நீக்கும்.
                       
                      அத்திப்பால்

காரமோ டுட்டிணமாங் காதுகின்ற பித்தத்தை
நீரிழிவைச் சூலைகளை நீடிரத்தஞ் – சேருங்
கிரிச்சரத்தைப் போக்குங் கிளர்கோளி யென்னும்
மரச்சருமப் பாலதனை வாங்கு.
செய்கை ; சங்கோசனகாரி
காரமும் உஷ்ணமுமுள்ள அத்திப்பால் பித்தம்,அதீநீர்,கீல்பிடிப்பு,இரத்த மூத்திரக் கிரிச்சரம் நீக்கும்.(கோளி என்றால் அத்திமரம்.) 

                   அத்திப்பிஞ்சு

மூலக் கிராணியறு மூலவிரத் தந்தீரும்
சாலக் கடுப்புந் தரிக்குமோ – மாலரவத்
துத்திப் படவல்குற் றோகாய் துவர்ப்பையுறு
மத்திச் சிறுபிஞ் சருந்து.
செய்கை ; சங்கோசனகாரி,காமவிரித்தினி.
துவர்ப்புச் சுவையுடைய அத்திப் பிஞ்சால் மூலவாயு,கிராணி,ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு,தீரும்.

1.   200மிலி அத்திக்கள்ளில் கற்கண்டு சேர்த்து காலையில் 20 நாட்களுக்குக் குறையாமல் சாப்பிட்டுவர மேகவெட்டை,பித்தமயக்கம்,அதிதாகம் நீங்கும்.
2.   அதிகம் முற்றாத காய்களை தனியாகவோ அல்லது பயறுகளுடன் கூட்டமுது செய்து உணவுடன் உண்டுவர பிரமேகம்,உட்சூடு,மலக்கட்டு நீங்கும்.
3.   கால்படி காயை சுதம் செய்து இடித்து 1லி தண்ணீரில் கால் லி ஆகும்படி வேகவைத்து பிசைந்து வடித்த நீரில் சிறிது சர்க்கரை சேர்த்து உட்கொள்ள பழைய மலத்தை வெளித் தள்ளும்.உட்சூடு தணியும். தாகத்தை அடக்கும்.மருந்தின் சத்தை இரத்தத்திற்கு ஊட்டும்.
4.   40கிராம் புறணி நீக்கிய பட்டையை இடித்து பழகிய பானையில் 8ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து 30-50 மிலி தினம் 3 வேளை கொடுக்க ஆசனக் கடுப்பு,உதிரப்போக்கு,சீதரத்தபேதி,தந்திப்பிரமேகம் நீங்கும்.
5.   மேற்படி கியாழம் கொண்டு புண்களைக் கழுவ ஆறும்.
6.   அத்திப்பட்டை,நாவல்பட்டை,கருவேலம்பட்டை,நறுவிளம்பட்டை, சமன் இடித்துப் பொடித்து திரிகடி 50மிலி கொதிக்கிற நீரிலிட்டு 15 நிமிடம் கழித்துப் பருக பெரும்பாடு,இரத்தபேதி,சீதபேதி குணமாகும்.
7.   மேற்படி சூரணத்துடன் கார் அரிசி மாவுடன் பிட்டவித்து சர்க்கரை,நெய் சேர்த்து காலையில் 3 -5 நாள் கொடுக்க பெரும்பாடு குணமாகும்.
8.   முதிர்ந்து கீழே விழுந்த அத்திப் பழத்தை தேனில் ஊறவைத்தோ அல்லது சர்க்கரை சேர்த்தோ சாப்பிட மலபந்தம்,பித்தம் நீங்கும்.
9.   15மிலி அத்திப்பாலுடன் வெண்ணை, சர்க்கரை கூட்டிக் கொடுக்க நீரிழிவு,இரத்தபேதி,பெரும்பாடு,இரத்தமூத்திரம்,நரம்புகளின் பிடிப்பு, பித்தம் போம்.
10. அத்திப்பாலை பற்றுப்போட கீல்வாதம் குணமாகும்.
11. பூனைக்காலி வித்து,நிலப்பனங்கிழங்கு,பூமிசர்க்கரைக் கிழங்கு,முருங்கை வித்து சமன் பொடித்து, காலைமாலை 5-10கிராம்,2 தேகரண்டி அத்திப்பாலில் கொடுக்க 20 நாளில் தாது அளவு கடந்து மீறும். தேகம் பூரிக்கும்.
12. அத்திப்பிஞ்சு,கோவைப்பிஞ்சு,மாம்பட்டை,சிறுசெருப்படை சமன் வாழைப்பூச் சாறுவிட்டு நெகிழ அரைத்து நெல்லிக்காயளவு தினம் 3 வேளை கொடுத்துவர சீதபேதி,இரத்தபேதி,வயிற்றுக்கடுப்பு தீரும்.
13. பழத்தை உலர்த்திப் பொடித்து காலைமாலை 1 தேகரண்டி பாலில் உட்கொள்ள இதயம் வலுவாகும்.இரத்தம்பெருகும்.

உலர்ந்த அத்திப்பழங்களில்கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம்,செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக்காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.
புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து
அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் , வைட்டமின் பி, வைட்டமின் பி 12,
வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.

                                                      

கருத்துகள் இல்லை: